விளக்கங்கள் இல்லை - புகார்கள் இல்லை



ஹாலந்து, நெதர்லாண்ட்ஸ் – 17 ஜூன் 2012

ஹாலந்தில் ஆனந்த அலைகள் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை?
உங்களுக்குத் தெரியுமா, நம்மை பற்றி மட்டுமே நினைக்கும்போது சுருங்குகிறோம். ஆனால் நம் சமூகத்தைப் பற்றி, ஒவ்வொருவருக்குமாக நினைக்கும் போது நாம் அதிகம் மகிழ்கிறோம். ஆம், அதில் சோதனைகள் உள்ளது.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், சரி தானே? யாராவது இங்கு மகிழ்ச்சியாக இருக்க விரும்பாதவர்கள் இருக்கிறார்களா? ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு படைப்பும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறது. இப்போது, மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி? மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் அந்த வழி. நீங்கள் மகிழ்ச்சியை பரப்பும்போது அது வளர்கிறது. நீங்கள் அதை பரப்பாமல் உங்களுக்குள் வைத்துக் கொள்ளும்போது, அது குறைந்து காணாமல் போகிறது. இதுதான் மக்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க விரும்புகிறார்கள், ஆனால் அதை எப்படி எல்லோருடனும் பகிர்ந்துகொள்வது, தங்கள் குடும்பத்தை எப்படி விரிவாக்கிக் கொள்வது என்று தெரியவில்லை. அதுதான் வாழும் கலை. ஒருவருடைய மகிழ்ச்சியை எப்படி பெருக்குவது, தன் குடும்பத்தை எப்படி விரிவாக்குவது என்ற கல்வியே வாழும் கலை. எனவே, நாம் இதை செய்வதில் உறுதியோடு இருக்கிறோமா?
ஒரு பழைய சமஸ்க்ருத பழமொழி ஒன்று கூறுகிறது, ‘ஒரு உண்மையான வழிபாடு அல்லது இறைவனிடம் பிரார்த்தனை என்பது மற்றவரிடம் மகிழ்ச்சியை உண்டாக்குவது தான். இதில் சவால்கள் உள்ளன, அதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சவால்கள் உண்டு. வேலை, கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர், சகோதரி, அம்மா, அப்பா, குடும்பம், ஆரோக்கியம், முதலிய பல காரணங்களால் ஒருவருக்கு சவால்கள் இருக்கலாம். எல்லா சவால்களும் நம்மைச் சூழ்திருக்கிறது, சரியா? யாருடைய வாழ்க்கையிலும் சவால்கள் இல்லாத நேரம் இருப்பதில்லை. உங்கள் நண்பரால் இல்லாவிட்டால், உங்கள் உறவினரால் சவால்கள். இது எதுவுமில்லைஎன்றால், சோதனை தர இந்த உலகம் இருக்கிறது!
கிரீஸ் நாட்டில் இன்று தேர்தல். எல்லோரும் என்ன ஆகுமோ தெரியாது என்ற பதைபதைப்பில் இருக்கிறார்கள்.  கிரீஸ் மூழ்கினால், யுரோவுக்கும் (Euro) ஐரோப்பாவுக்கும் பெருத்த பாதிப்பு உண்டு. இந்த பயம் இருக்கிறது. எனவே ஒவ்வொருவருக்கும் கவலைப்படுவதற்கு ஒன்றில்லாவிட்டால் ஒன்று இருக்கிறது, சரிதானே?
இப்போது, இந்த கடினமான சூழ்நிலைகளையும் தாண்டி, நாம் உயர்ந்தால், முன்னேறினால், திறந்த கரங்களோடு, சிறகு விரித்து, ஆனந்தமான உலகை இலக்காக கொண்டு வேலை செய்தோமானால், நான் சொல்கிறேன், நாம் வெற்றி பெறுவோம். புரிந்ததா?
1988 நான் முதன் முதலில் ஹாலந்து வந்தபோது ஒரு சிறு அறையில் உரையாற்றினேன். சுமார் 15 பேர் அப்போது இருந்தனர். அதில் இருந்தவர்களில் சுமார், 5 அல்லது 6 பேர் சூரினாம் நாட்டை சேர்ந்த இந்தியர்கள். அவர்கள் சொன்னார்கள், ‘ஹாலந்து மிக கடினம். இங்குள்ளவர்கள் ஆன்மிகம் சம்பந்தப்ப்பட்ட எதுவும் செய்ய மாட்டார்கள், உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.’
நான் ஒரு சிறு புன்னகையுடன் அதை கேட்டுக் கொண்டேன். பிறகு, சூரினாம் சமூகம் வாழ்ந்த இடத்திலிருந்த ஒரு சிறு கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு என்னை பேச சொன்னார்கள். மறு நாள், வேறு ஒரு இடத்திலுள்ள கோவிலுக்கு நான் வர வேண்டும் என்று விரும்பினார்கள்.
நான் சொன்னேன், ‘நான் வருகிறேன், ஆனால் நான் எல்லோருடனும், அந்த முழு சமூகத்துடனும் பேசவேண்டும்.’ அவர்கள் சொன்னார்கள், ‘இங்குள்ளவர்கள் இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட எதையும் விரும்ப மாட்டார்கள், மக்களுக்கு பிடிக்காது; இந்த பேதம் இருக்கிறது.’
நான் கூறினேன்,’இல்லை, பரவாயில்லை’. முறுவலுடன் நான் சொன்னேன், ‘இந்த முழு உலகமும் எனது குடும்பம். ஒன்றல்ல எல்லா சமூகமும் என்னைச் சேர்ந்தது. டட்ச், சூரினாம், இந்தியர்கள் என்று மட்டுமல்ல, எல்லா சமூகமும் என்னைச் சேர்ந்தது.’ இங்கு இரண்டு தனித் தனி கோவில்களுள்ளன. ஒன்று சூரினாம் நாட்டைச் சேர்ந்தவர்களுக்காக, மற்றொன்று இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்திருப்பவர்களுக்காக. நான் இரண்டு கோவில்களுக்கும் சென்ற பின்னர் ஒரு சர்ச்சுக்கும் சென்றேன். அங்கு ஒருசிறு கூட்டம். அவர்களும் தியானத்தை நான்றாக அனுபவித்தனர்.
அவர்களுக்கு சிறு அளவு தியானமும், கொஞ்சம் சுதர்ஷனக் க்ரியாவும் கற்பித்தேன். பிறகு நான் சொன்னேன், ‘ஒரு நாள் இங்கு, ஹாலந்தில் நிறைய பேர் சுதர்சனக் க்ரியா செய்ய வருவார்கள். அதிலிருந்து நான் மேலும் நகரத் தொடங்கினேன். பெங்களூரின் வசதி, நல்ல தட்ப வெப்பம், அழகு, அதன் சொகுசில் இருந்திருந்தால் நான் என் வசதி வட்டத்திற்குள்ளேயே முடங்கியிருந்திருப்பேன்.
அந்த நாட்களில், இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்வது கடினமாயிருந்தது. செலவு அதிகம். மேலும் அப்போது இங்கு நல்ல குளிர். ஒரே இருட்டும் குளிருமாயிருக்கும். ஒரே ஒரு அறை கொண்ட ஒரு சிறு குடியிருப்பில் தங்கியிருந்தேன். அந்த அறையிலிருந்து சிறிய படிகள் வழியாக கீழே இறங்கி வந்தால், ஒரு கால்வாயின் முன் நிற்பீர்கள். நான் எப்போதுமே ஜன்னல் கதவை திறந்தே வைப்பேன். ஜன்னல்கள் மூடியிருப்பது எனக்கு பிடிக்காது. எனவே ஜன்னல் கதவை திருந்து வைப்பேன். குளிர் காற்று இரவு முழுதும் வீசியபடி இருக்கும். ஆனால் அதையெல்லாம் நான் மகிழ்ச்சியுடனேயே அனுபவித்தேன். ஏனென்றால் எனக்கு எல்லா ஹாலந்து மக்களையும் தொடர்புகொள்ள வேண்டிய இலட்சியம் இருந்தது. அவர்கள் எல்லோரும் இந்த அழகிய பரிசின் பலனைப் பெற்று மகிழ வேண்டும் என்று விரும்பினேன்.
அதன் பிறகு, பல முறை இங்கு வந்தேன் மற்றும் பலர் இதில் சேந்தார்கள். ஆனாலும் நாம் போக வேண்டிய வேகத்தில் நாம் இன்னும் போகவில்லை. அப்படி நீங்கள் நினைக்கவில்லை? மிக மெதுவான வண்டியில், கடைசி பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். வேகமான பாதைக்கு மாற வேண்டும். ஹாலந்து மக்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு இந்த நாட்டில் ஆனந்த அலை ஏற்படுத்த வேண்டும்.
ஆங்காங்கே மக்களை ஒன்று கூடச் சொல்லி கொஞ்சம் பாஸ்த்ரிகா கொஞ்சம் தியானம் என்று எல்லோருக்கும் கொஞ்சம் மாதிரி காண்பிக்க வேண்டும்.
வாருங்கள்! நாம் ஆடிப் பாடி ஒவ்வொருவருடன் பகிர்ந்து கொள்ளுவோம். வாழ்கை மிகச் சிறியது! இந்த கிரகத்திற்கு அழுது கொண்டே வந்தோம், ஆனால் அழுது கொண்டே இங்கிருந்து திரும்பிச் செல்ல விருப்பமில்லை. இங்கிருந்து போகும் போதாவது சிரித்துக் கொண்டே செல்வோம். ஆம் இந்த உடம்பு நோய்படும். பல காலமாக நோய் என்பது இந்த உலகில் இருந்து வருகிறது. இந்த உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உடம்பிற்கு தேவையான உணவு, உறைவிடம் மற்றைய பிற தேவைகளை நாம் அளிக்க வேண்டும். ஆனால், உட்கார்ந்து இதைப் பற்றி கவலைப் பட்டுக்கொண்டிருப்பது தேவையில்லை. புரிகிறதா? கவலை தேவையற்றது.
கே: அன்பு குருஜி, மக்கள் சில நேரம் தாங்கள் கண்காணாமல் இருப்பது போல ஒரு உணர்வை எனக்கு அளிக்கிறார்கள். இதைப் பற்றி நாம் என்ன செய்யலாம்? தயவு செய்து என் குடும்பத்திற்கு ஆசீர்வாதம் செய்யுங்கள்.
குருதேவ்: கண்காணாமல், அப்படியென்றால் மக்கள் உங்களை கண்டுகொள்வதில்லையா? விட்டுத் தள்ளுங்கள். அது நல்லதே. யாரும் உங்களை கண்டுகொள்ளாதபோது, அவர்கள் உங்களிடம் எதையும் கேட்க முடியாது. உங்களுக்குத் தெரியுமா, குருவாக இருப்பது ஒரு பெரிய வேலை. பல வேண்டுதல்கள் உண்டு! ஒவ்வொரு நிமிடமும் கவனமாகவும் விழிப்போடும் இருக்க வேண்டும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அவர்களுக்கு கிடைத்தாக வேண்டும். நீங்கள் கண்காணமல் இருப்பது நல்லதே. அதிர்ஷ்டத்தை அனுபவியுங்கள்! மற்றவற்றை விட்டுத் தள்ளுங்கள்.
கே: என் ஹாலந்து நாட்டு மக்கள் எப்படி அழகிய விஷயங்களை உருவாக்குகிறார்கள் என்று விளக்க முடியுமா? நாங்கள் பொருள் வாழ்கையை மட்டுமே பின்பற்றுகிறோம், மெய்யுணர்வைப் பற்றிய விழிப்பு கூட இல்லை. எப்படி இது முடிகிறது?
குருதேவ்: நான் அப்படி நினைக்கவில்லை. மக்களிடம் மெய்யுணர்வு இருக்கிறது. மக்களிடம் அவ்வளவு கருணை இருக்கிறது. ஹாலந்து மக்கள் நிறைய மதிப்புகளை கொண்டிருக்கிறார்கள்; துணை செய்யவும் சேவை செய்யவும் தயாராய் இருக்கிறார்கள். நீங்கள் அதற்கான வாய்ப்பும் அமைப்பும் தந்தாலே போதும்.
உலகில் எங்கு பேரழிவு நடந்தாலும் ஹாலந்தின் உதவிக்கரம் உடனடியாக நீளும். சுனாமி வந்த போது ஹாலந்த் உதவி செய்தது.  நிறைய துணிமணிகள் வந்து அவற்றை நாம் பகிர்ந்து அளித்தோம். உதவி நிறைய வருகிறது. ஹாலந்து மக்கள் பெரிய இதயம் படைத்தவர்கள். அவர்களை குறைவாக மதிப்பிடாதீர்கள். அவர்கள் துலிப் மலர்களைப் போன்றவர்கள் .
கே: அன்பு குருஜி, நான் ஒரு யோகா ஆசிரியர் மேலும் நான் கடுமையாக உழைக்கிறேன். நான் என்னை வேலையில் நன்கு ஆழ்த்திக் கொள்கிறேன், ஆனாலும் மேலும் நான் நிறைய செய்ய முடியும் என்று தெரிகிறது. உங்கள் அறிவுரை எனக்குத் தேவை.
குருதேவ்: எனக்கு நிறைய தன்னார்வ சேவையாளர்கள் தேவை. இங்கு நான்கு மையங்கள் உள்ளது. இந்த மையங்களில் வேலை செய்ய சேவையாளர்கள் நிறைய தேவைப் படுகிறார்கள். நீங்கள் தன்னார்வ சேவையாளராக பதிவு செய்து கொள்ளுங்கள். மாதத்தில் இரண்டு நாட்கள் சேவை செய்தால் கூட மிக நல்லது.
நீங்கள் மாதத்தில் இரண்டு நாட்கள், ஒரு மூன்று அல்லது நான்கு மணிநேரம் வேலை செய்தால் கூட போதும். என்ன வேலை தேவைப் படுகிறதோ அதை செய்யலாம். உங்களில் எத்தனை பேர் சேவையாளராக வரத் தயாராக இருக்கிறீர்கள்? உங்களால் என்ன முடியுமோ அதுதான் சேவை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு மூன்று அல்லது நான்கு மணிநேரம் வந்து சேவை செய்வது மட்டுமே. சில மணி நேரம் நம் மையத்திற்கு வந்து, சில தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம், இங்கு வருபவர்களுக்கு சில நல்ல வார்த்தைகள் சொல்லலாம், உதவிகள் சில செய்யலாம், இதை நம்மால் செய்ய முடியாது?
இந்த அளவு பெரிய நாட்டிற்கு ஐந்து மையங்கள் போதாது என்பது உங்களுக்குத் தெரியும். டெல்லியில் எத்தனை சத்சங்கக் குழுக்கள் இருக்கின்றன தெரியுமா? 280  சத்சங்கக் குழுக்கள் இருக்கின்றன. இந்த எல்லா இடத்திலும் சுதர்சனக் கிரியா நடக்கிறது.
பெங்களூரில், ஆசிரமம் இருந்தாலும், அதற்கு மேல சுமார் 195 மையங்கள் இருக்கிறது. இங்கு, அந்தப் பகுதியிலுள்ள மக்கள் இணைந்து சுதர்சனக் கிரியா செய்வது, தியானம் செய்வது, பஜனை செய்வது, இணைந்து உண்பது என்று இருக்கிறார்கள்.
ஆம்ஸ்டர்டாம், ஹேக் போன்ற நகரங்களுக்கு பல மையங்கள் தேவை. இங்கு மக்கள் குழுமி சுதர்சனக் கிரியா தியானம் போன்றவற்றை செய்யலாம். எத்தனை இடத்தில் மக்டோனால்ட்ஸ் இருக்கிறதோ அத்தனை மையங்கள் தேவை என்று சொல்வேன். அது இந்த நாட்டில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
கேள்வி: குடும்ப உறவை மேம்படுத்துவது எப்படி?
குருதேவ்: குடும்ப உறவை மேம்படுத்த, அதற்கான எந்த முயற்சியும் செய்யாமலிருக்க வேண்டும். ஒரு தவறான புரிதலை சமாளிக்க நினைக்காதீர்கள். அதை பார்த்து விட்டு அப்படியே விட்டு விடுங்கள். சரியானதை சொல்லித்தந்து விட்டு அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். மேலே செல்லுங்கள். நடந்தவற்றை ஆராயாதீர்கள். ‘இதை ஏன் செய்தாய்?’, ‘என்னை நீ விரும்பவில்லை.’ போன்ற குப்பைகள் எல்லாம் நேரத்தை மட்டுமே வீணாக்கும். நாம் உணர்ச்சிக் குப்பையில் வாழ்கிறோம். அதை எல்லாம் எறிந்துவிட்டு கொப்பளிக்கும் புத்துணர்ச்சி கொள்ளுங்கள். அந்த ஆர்வம் தேவை.
யாரிடமாவது இந்த ஆர்வம் இல்லையென்றால், அவர்களை ஆர்வத்தில் தள்ளிவிடுங்கள். அதைப் பற்றி புகார் செய்வதோ விளக்கம் கேட்பதோ செய்ய வேண்டாம். குடும்ப உறவை மேம்படுத்த முக்கியமான இரண்டு – விளக்கங்கள் இல்லை! மற்றும் புகார்கள் இல்லை! அவ்வளவுதான். புரிந்ததா? மற்றவர்களிடம் விளக்கம் கேட்பது முட்டாள்தனமானது? புரிந்துகொள்வார்கள் என்று மற்றவர்களுக்கு விளக்குவது மற்றொரு முட்டாள்தனம். இரண்டு விதத்திலும் அது வேலை செய்யாது. அப்படியே விட்டுவிட்டு மேலே செல்வதுதான் சிறந்தது.