அன்பில்லாத வாழ்கை வெறுமையானது............


17
2012...............................
ஹார்லெம் - ஹாலந்து
ஜூன்

ஸ்ரீ ஸ்ரீ: இந்த மாலைப் பொழுதை எவ்வாறு கழிக்க விரும்புகிறீர்கள்? என்ன விவாதிக்க விரும்புகிறீர்கள்? 

அவையோர்: ஆற்றுதல் பற்றிப்பேசுங்கள் - தியானம் செய்யலாம்- ஆயுர்வேதம் பற்றிப்பேசுங்கள்- நெருக்கடி பற்றி பேசுங்கள்.


ஸ்ரீ ஸ்ரீ : பாருங்கள்! உலக நெருக்கடி பற்றி பேசும் போது உங்கள் முகங்களில் புன் முறுவலும் சிரிப்பும் தெரிகிறது. சாதரணமாக நெருக்கடி நிலை என்றால் மக்கள் அழுவார்கள். வாழும் கலையில் ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பாக மாறுகிறது. ஒவ்வொரு பிரச்சினையும் ஒரு சவாலாகவும் , நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ள கூடியவாறு உலகை மாற்ற வேண்டும் அல்லவா? சீன மொழியில் நெருக்கடி, வாய்ப்பு இரண்டிற்கும் ஒரே சொல் தான் பயன்படுத்த படுகிறது. நெருக்கடி என்றால் அது வாய்ப்பு என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. சரி ! வேறு என்ன விவாதிக்கலாம்? 

அவையோர்: விடுதலை- அன்பு - எவ்வாறு முடிவுகள் எடுப்பது? - குழப்பம்- உலகளாவிய கல்விமுறை- கால்பந்து 


ஸ்ரீ ஸ்ரீ: இதில் எதுவுமே எனக்குத் தெரியாது! இந்தியாவில் கால்பந்து  பிரபலமானது அல்ல. கிரிக்கெட் தான். அதுவும் எனக்கு சரியாக தெரியாது. ஆக, இதில் எதுவுமே எனக்கு தெரியாது!


அவையோர்: பரவாயில்லை. இங்கு உங்களுடன் இருப்பதே இதமாகத்தான் இருக்கிறது.


ஸ்ரீ ஸ்ரீ: பார்த்தீர்களா? வார்த்தைகளைவிட,சேர்ந்து  இருப்பதின் மூலம் நாம் நெருக்கமாக உணர்கிறோம். ஒரு உதாரணம் கூறுகிறேன். நாம் விமானத்திலிருந்து இறங்கும் போது விமானப்பணிப் பெண் ' இன்று நல்ல நாளாக அமையட்டும்" என்று வாழ்த்து தெரிவிக்கிறாள். அது அவளது உள்ளத்தில் இருந்து வரும் வாழ்த்து அல்ல. மனம் எங்கேயோ இருக்கிறது. வாய் வாழ்த்தி கொண்டிருக்கிறது. அதுஉதட்டளவில் வரும் வாழ்த்து.ஆனால் நமது அன்னையோ அல்லது பாட்டி, அத்தை,மாமா போன்ற நெருங்கிய உறவினரோ  இதே வாழ்த்தை  உளமார தெரிவிக்கும் போது ஒரு அதிர்வு ஏற்படுகிறது. கவனித்திருக்கிறீர்களா?

நாம் குழந்தையாக இருந்த போது இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. எது பேசினாலும் அது உள்ளத்திலிருந்து  வரும் உண்மையானதாக இருக்கும். ஆனால் வயதாகும் போது பேச்சும் எண்ணமும் ஒன்றானதாக இல்லாமல் முரண்படுகிறது.


சில சமயங்களில் மக்கள் " மிக்க நன்றி" என்று எல்லாவற்றிக்கும் கூறுகிறார்கள். முக்கியமாக அமெரிக்காவில் ஒரு க்ளாஸ் தண்ணீர் கொடுத்தாலும் "மிக்க நன்றி'' என்கிறார்கள். ஒரு டம்ளர் தண்ணீருக்கு ஏன் இவ்வளவு பெரிய நன்றி தெரிவித்தல்? சௌதி அரேபியா பாலைவனத்தில் சிறிது தண்ணீர் கொடுத்து உதவினால் அது உயிரைக்காக்கும் அளவிற்கு பெரும் உதவி.அதற்கு நன்றி தெரிவித்தல் உள்ளத்திலிருந்து வருவது. நன்றி கூறக்கூடாது என்று நான் சொல்ல வில்லை. சொல்லுக்கும் எண்ணத்திற்கும் இடையே வேறுபாடு ஏற்படும் போது அதை சற்று  கவனியுங்கள்,என்கிறேன். அப்போது தான் வாக்கு உண்மையானதாக இருக்கும்.


இத்தகைய உண்மை நிலை இல்லையென்றால் வாழ்கை சோர்வாகவும் வரண்டதாகவும்  இருக்கும். வாழ்கையில் உங்களுக்கு என்ன வேண்டும்? நல்ல உணவு, நல்ல உடை, நல்ல படுக்கை எல்லாமே இருந்து அன்பு, சார்பு நிலை, கவனிக்க யாருமற்ற நிலை என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.அப்படிப்பட்ட நிலையில் இந்த உலகில் வாழ விரும்புவீர்களா?

அன்பும் சார்பு நிலையும் இல்லாத வாழ்கை அர்த்தமில்லாதது. மனித அல்லது எந்த ஜீவனின்  நிலைத்தத்துவமே இது தான். பூனை,நாய்,பசு,குதிரை போன்றவைகள் கூட இந்த அடிப்படை யிலேயே ஜீவிக்கின்றன.ஒரு குதிரை உங்கள் வீட்டில் இருந்து, நீங்கள் ஒரு மாதம் வெளியூர் சென்று திரும்பியதும் அது தன் அன்பை உங்களுக்கு உடனே தெரிவிக்கிறது அல்லவா? நமது உணர்வுகளுடன் தொடர்புடயவர்களாக  இருப்பதே மனித வாழ்கையின் சாராம்சம்.

அதற்காக, நீங்கள் " நீல நட்சத்திரம் '' ஆக இருக்க வேண்டியதில்லை. வாழும்கலையில்
நீல நட்சத்திரம் என்ற சொல் அதிக உணர்ச்சிகளுடன் அறிவற்ற நிலையில் உள்ளவர்களை குறிப்பிடுவதாகும். அதுவும் சரியில்லை.உணர்ச்சிகளுக்கும் அறிவிற்கும் சமநிலை வேண்டும். அதுபோல் சொந்த வாழ்விற்கும், பொது  வாழ்விற்கும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.
சிலர் தன்னை பற்றிய அக்கறையே இல்லாமல்,பிறருக்காகவே எப்போதும் செயல்பட்டு கொண்டிருப்பார்கள். வாழும் கலை இந்த இரண்டிற்கும் இடையே ஒரு சம நிலையை உருவாக்கும். உங்கள் உடல், மனம், உணர்வுகள் ஆகியவற்றை கவனித்து கொண்டு, சமுதாயத்தையும் கவனித்து கொள்ள வேண்டும்.சமுதாயத்திற்காகப் பொறுப்பெடுத்து கொள்ளுங்கள், அதே சமயம் உங்கள் தனிப்பட்ட வாழ்கை உயர்வு, முன்னேற்றம்
ஆகியவற்றை உதாசீனப்படுத்தி விடாதீர்கள். 

நமது வீட்டிலும், பள்ளியிலும், அதிர்வுகள், உணர்வுகள்,மற்றும் உணர்ச்சிகளை எவ்வாறு தூய்மையாக,தெளிவாக,மென்மையாக மகிழ்ச்சியாக வைத்து கொள்வது என்பது பற்றி யாரும்
கற்று தருவதில்லை.அவை இயல்பான விஷயம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுகிறது. ஆம். உண்மை தான்.மகிழ்ச்சி என்பது நமது இயல்பு. ஆனால் நடுவில் எங்கோ இதை தவற விட்டு விடுகிறோம். அல்லவா? ஆனால் இது பங்கு சந்தையை பொறுத்த விஷயம் அல்ல.பூட்டான், பங்களாதேஷ் ஆகிய பின்தங்கிய பகுதி மக்கள் மிக மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் பூட்டான் பிரதமர் '' மொத்த மனையியல் மகிழ்ச்சி ''என்பது பற்றி  ஒரு கருத்தரங்கம் நிகழ்த்தினார். எவ்வாறு  மகிழ்ச்சியை உருவாக்குவது? என்பது இதன் மையக்கருத்து. தற்போது ஒவ்வொருவரும் இது பற்றி பேசி வருகிறார்கள். கடந்த
முப்பது வருடங்களாக பேசி வருகிறோம். ஒரு வழியாக, உலகத்தலைவர்கள் மனித மன மகிழ்ச்சி  பற்றி கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது எனக்கு திருப்தியை தருகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அரசாங்கங்கள் மக்கள் நலத்தைப்பற்றி கவனம் செலுத்தியது  கிடையாது. மெதுவாக, மக்கள் உடல் நலம் பின்னர் மனநலம், இப்போது ஆன்மீக நலம்  பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உலக நல சங்கம் பத்து ஆண்டுகளுக்கு முன் இதை சேர்த்து கொண்டது. இப்போது மனையியல் மகிழ்ச்சி பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மகிழ்ச்சி அலைகள் உருவாக்கவே  நான் இங்கு வந்திருக்கிறேன். நான் எங்கு சென்றாலும் மக்கள் " குருஜி! நீங்கள் இங்கேயே இருங்கள். நீங்கள் இருக்கும் போது மகிழ்ச்சியாக உணருகிறோம் என்கிறார்கள். ஆனால் நான் இல்லாத போது மகிழ்ச்சி இழப்பது சரியான தீர்வு அல்ல. நான் வரும்போது மகிழ்வலைகளை ஏற்படுத்துகிறேன். அவற்றை நீங்கள் மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும். வாழும் கலை பயிற்சி பெற்றவர்கள் இந்த மாற்றத்தை உணர்வார்கள். நமக்காக என்று சிறிது நேரம் ஒதுக்கி தியானம் செய்து, சமுதாய நலனிலும்  ஈடுபட வேண்டும்.

முதலில், மக்களை மகிழ்ச்சியனவர்களாக ஆக்குவதே என் வாழ்வின் நோக்கம் என்று உறுதி எடுத்து கொள்ளுங்கள். இதற்கு நான் என்னால் முடிந்ததை செய்கிறேன். நீங்கள்  உங்கள் நேரம், திறமை மற்றும் வழிகள் ஆகியவற்றைத் தாருங்கள். இது பற்றி சிந்தியுங்கள். ஆக்க பூர்வமான வழிகளில் இந்த சமுதாயத்தை மகிழ்ச்சி கரமானதாக மாற்றுவோம். வன்முறையற்ற உலகமே எனது தொலைநோக்கு கனவு. வன்முறையற்ற சமுதாயம், நோயற்ற உடல், குழப்பமற்ற மனநிலை, தடையற்ற அறிவு, உணர்வதிர்ச்சியற்ற நினைவு நிலை, துன்பமற்ற ஆத்மா இவையனைத்தும் ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. மனதில் தடைகள் அதிகம் உள்ளன. அவற்றை களையவேண்டும்.ஐரோப்பாவில் முப்பது சதவீதம் பேர் மன அழுத்தத்தில் அவதிப்படுகிறார்கள். தற்கொலைகள் அதிகமாகின்றன. நான், நவீன தொழில்நுட்பமமும் பழங்கால ஞானமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறேன். முற்காலத்தில் பல நல்ல விஷயங்கள் கூறப்பட்டன. அவற்றை நவீன சிந்தனைகளுடன்  இணைத்தால் உலகம் சீர்படும்.