தியானம் உங்களை அதிர்ஷ்டக்காரராக்கும்...


10
2012...............................
பெங்களூர், இந்தியா.
ஜூன் 


நம் நாடு ரிஷிகள் வாழ்ந்த நாடு. க்ருஷி (விவசாயத்திற்கு)க்கும் பெயர் போனது. நாம் எந்த பூஜையானாலும் விதை விதைப்பதை முறையாகக் கொண்டிருக்கிறோம். ஒரு சிறிய மண் பாத்திரத்தில் மண் நிரப்பி விதை விதைக்கிறோம்.இதை அங்குரார்ப்பணம் என்று சொல்வார்கள். விதைத்த பின் சிறிது தண்ணீரும் பாலும் தெளிக்கிறோம். வாழ்க்கையும் பூஜையும் வேறு வேறல்ல. நம் வாழ்க்கையே ஒரு பூஜை தான். நாம் நடக்கும் இடமெல்லாம் கோயிலில் பிரகாரம் சுற்றுவது போல தான். வாழ்க்கையை ஒரு பூஜையாக பார்க்க வேண்டும். வாழ்க்கை தூய்மையானதாக இருக்க வேண்டும்.

தூய்மை இருக்கும் போது மனம் வலுவாக இருக்கும். புத்தி கூர்மையாக இருக்கும். வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். அதனால் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துத் தான் விதை விதைப்பார்கள். பக்தியோடு விதைப்பார்கள். மேலும் நம் பெரியோர்கள், உணவை உண்ணுவதற்கு முன் கைகளைக் குவித்து இந்த உணவை அளித்தவர் சுகமாக இருக்கட்டும் என்று வாழ்த்தி வேண்டிக்கொள்வார்கள். “அன்னதாதா சுகி பவ” என்று வடமொழியில் சொல்வார்கள். உணவு அருந்து முன் நாமும் அப்படிச் செய்ய வேண்டும். நீங்கள் அப்படிச் செய்வீர்களா?

நமக்கு உணவு அளிப்பதற்குப் பொறுப்பானவர்களில் முதலிடம் விவசாயிக்குத் தான். வியாபாரிகள் அடுத்த இடத்தில் இருக்கிறார்கள். மூன்றாவது வீட்டில் இருக்கும் பெண்கள்.

விவசாயி பயிரை வளர்த்து தானியங்களை அளிக்கிறார். வியாபாரிகள் அதை நம்மிடம் எடுத்து வருகிறார்கள். வீட்டில் இருக்கும் மகளிர் அதை சமைத்து நமக்கு உணவு படைக்கிறார்கள். இவர்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருக்க நாம் பிரார்த்தனை செய்வோம். இதில் யாராவது ஒருவர் வருத்தமாக இருந்தால் கூட நம் வாழ்வு பாதிக்கப்படும்.

விவசாயி ஒரு நல்ல பயிரை வளர்க்கிறார். ஆனால் மொத்த, மற்றும் சில்லறை வியாபாரி கள் விவசாயிக்குச் சேர வேண்டிய சரியான விலை கொடுக்காவிட்டால், அல்லது விநியோகிக்கச் சரியான திட்டமிடாவிட்டால், பெரிய தவறு இழைக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் செயற்கை உரங்களைப் போட்டு, இரசாயணங்களால் நிலத்தை விஷத் தன்மையுள்ளதாக்க கூடாது. மரபணு மூலம் விளைவித்த பயிரை தங்கள் நிலங்களில் வளர்க்கக் கூடாது. நாம் இயற்கை உரத்தைப் பயன்படுத்த வேண்டும். நிறைய பேர் தற்போது உரங்களுக்காக செலவு செய்வதில்லை. தங்களுக்குத் தேவையான உரத்தைத் தானே தயாரித்துக் கொள்கிறார்கள்.

(www.artofliving.org/chemical-free-farming) என்ற வலை தளத்தைப் பார்க்கவும்). விவசாயிகள் விலை கொடுத்து வாங்கிய விதைகளைச் செயற்கை உரத்தாலும், பூச்சி கொல்லி மருந்துகளாலும் பாழ் செய்கிறார்கள். இதை நிறுத்தி, நம் பாரம்பரிய விவசாய முறைகளைக் கையாண்டால், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வியாபாரிகள் பேராசையின்றி வியாபாரம் செய்தால் அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நம் வீட்டுப் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்து உணவு படைத்தால், அந்த உணவு நன்றாக ஜீரணமாகும். அவர்கள் துக்கத்தோடும் கண்ணீரோடும் சமைத்து உணவு படைத்தால், ஜீரணிப்பதற்கு நாம் கண்ணீர் விட வேண்டியிருக்கும். நமக்கு உடல் வலி, தலை வலி, வயிற்று வலி மற்றும் பல விதமான நோய்கள் வரும். ஆகவே தினமும் உணவு அருந்து முன் இந்த மூன்று பேரும் (விவசாயி, வர்த்தகர், பெண்கள்) மகிழ்ச்சியாக இருக்க இந்த உணவை அளித்தவர் சுகமாக இருக்கட்டும் என்று பிரார்த்திப்போம். “அன்னதாதா சுகி பவ”.

ஒரு புத்திசாலியின் அடையாளம் என்ன?

ஒரு புத்திசாலி மிகவும் மோசமான மனிதனிடமிருந்தும் நல்ல குணங்களை வெளிப் படுத்துவார். நற்குணங்கள் எல்லோரிடமும் மறைந்திருக்கிறது. புத்திசாலி ஒரு குற்றவாளியிடமிருந்து கூட நல்ல குணங்களை வெளிப்படுத்துவார். “நீ முன்பு செய்தவைகளை மறந்து விடு. இப்போதிருந்து உன்னிடம் உள்ள நல்லவைகளைப் பார். உன்னிடம் நல்லவைகள் இருக்கின்றன” என்று சொல்லி அவனை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வார் “மக்களை கீழ்நிலைக்கு இழுத்து, நல்ல மனிதரிடம் கூட ஏதாவது கெட்ட குணங்களைத் தேடுவது, எல்லோரிடமும் குறை கண்டு பிடிப்பது” தான் மூடர்களின் அடையாளம்.

நல்ல நண்பர்களையும் கெட்ட நண்பர்களையும் எப்படித் தெரிந்து கொள்வது?

உன்னுடைய பிரச்சினையை ஒருவருடன் பகிர்ந்து கொண்டு, உன் பிரச்சினையை மிகவும் சிறியதாக நீ உணரும் படிச் செய்வாரானால் அவர்  நல்ல நண்பர். அவர்களுடன் பேசும் போது உன்னில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வளர்ப்பார் என்றால் அவர் நல்ல நண்பர். ஒருவருடன் நீ உன் பிரச்சினையைத் தெரிவித்தபின், முன்னை விட பிரச்சினை பெரிதாகி விட்டதாக உணர்ந்தால் அவர் நல்ல நண்பரல்ல.

நாம் மற்றவருடைய உற்சாகத்தைக் குறைத்து கீழ்நோக்கி இழுக்கிறோமா அல்லது அவருடைய ஆர்வத்தை வளர்க்கிறோமா என்று பரிசீலிக்க வேண்டும். நாம் பலமுறை நம்மை அறியாமலே அப்படிச் செய்கிறோம்.இந்த விஷயங்களை கவனித்து செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு நற்செய்தி இருக்கிறது. அஸ்ஸாமைச் சேர்ந்த ஆயிரம் தீவரவாதிகள் வாழும் கலை பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். அரசிடம் சரண் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் பெங்களூர் ஆசிரமத்துக்கு பயிற்சிக்காக வருகிறார்கள். உள்துறை அமைச்சகம் அவர்களை இங்கு அனுப்புகிறது.

கே: கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து எப்படி விடு படுவது? கெட்ட பழக்க வழக்கங்களின் ஞாபகம் திரும்பத் திரும்ப வருகிறது.

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட நிறைய பிராணயாமம் செய்யலாம். நாம் யார் யாருடன் பழகுகிறோம் என்பதைப் பொறுத்தும் இருக்கிறது. உங்களுக்கு அதிக நேரம் இருந்தால், கெட்ட வழங்கங்கள் வரும். சமுதாயத்துக்கான காரியங்களில் ஈடுபடும் போது கெட்ட பழக்க வழக்கங்கள் தானாகவே நீங்கி விடும்.

கே: குருவைத் தேர்ந்தெடுக்கும் முன் குரு தீக்ஷா பெறுவது அவசியமா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நீ குருவைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. வாழ்க்கையில் நீ கற்றுக் கொள்ளும் ஒவ்வொன்றிலும், நீ எங்கிருந்து கற்றுக் கொண்டாலும், அதில் குரு தத்துவம் இருக்கிறது. தாய் தான் உன் முதல் குரு. நீ வளர்ந்த பின் உனக்குக் கல்வி அளிக்கும் ஆசிரியர்கள் குருவாக இருக்கிறார்கள். இப்படியே வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் குரு உன்னோடு இருப்பதை உணரலாம். குருதத்துவம் எப்போதுமே உள்ளது. நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவி செய்வதாக மனதில் படும் அனைத்துமே குரு தத்துவமே!

கே: ராகு காலத்தில் பூஜை செய்யக் கூடாது என்பார்கள். நம் ஆசிரமத்தில் ஞாயிறு சத்சங்கம் எப்போதுமே ராகு காலத்தில் நிகழ்கிறது. அது ஏன்?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: ராகு காலத்தில் பூஜை செய்யக் கூடாது என்று எங்கும் சொல்லப் படவில்லை. உண்மையில் ராகு காலத்தில் பூஜை செய்வது மிகவும் சிறந்தது. ஆனால் திருமணம் மற்றும் புது மனை புகுவிழா ராகு காலத்தில் செய்யக் கூடாது. பொருள் சம்பந்தமான காரியங்களை ராகு காலத்தில் செய்யக் கூடாது என்பார்கள். கடவுளை நினைப்பதும், சத்சங்கம் நடத்துவதும் ராகு காலத்தில் செய்யலாம். ராகு காலத்தில் சத்சங்கம் நடத்துவது நல்லது. சத்சங்கம் நடத்த எந்த நேரமும் நல்லது. மற்றவர்களுக்கு உதவவும், கடவுளை நினைப்பதற்கும் நல்ல நேரம் பார்க்கத் தேவை இல்லை. இருபத்தி நாலு மணி நேரமும் நல்ல நேரம் தான்.

கே: நல்லவர்களை காக்கும் கடமை போலீஸ் நிர்வாகத்தைச் சேர்ந்ததா அல்லது பொது மக்களைச் சேர்ந்ததா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: இது எல்லா மனிதர்களின் கடமையாகும். உண்மையில் நீங்கள் போலீஸ் காரர்களை பாராட்ட வேண்டும்.

நான் ஜார்கண்ட் சென்ற போது அங்குள்ள இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது. “குருஜி!’ கடந்த ஆண்டு நான் என் இருநூறு ஜவான்களை இழந்திருக்கிறேன். மறுபடியும் அந்த வேலைக்கு ஆள் எடுக்கும் போது நக்ஸலைட் பிரச்சினையால் அவர்களுக்கு என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. (அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால்) அவர்களின் குடும்பத்தினரை எப்படிச் சந்திக்க முடியும்?” என்றார். போலீஸ்காரர்கள் நல்ல மனிதர்கள்.தங்கள் வாழ்க்கை யையும்,நேரத்தையும் தியாகம் செய்கிறார்கள். அவர்கள் பண்டிகைகளின் போது இரவு பகல் பார்க்காமல் கடமை ஆற்றுவதால் தன் குடும்பத்தினரோடு பண்டிகை கொண்டாட முடிவதில்லை. அவர்களின் சொந்த வாழ்க்கை மிகவும் கடினமானது. பிறர் நன்றி எதிர்பார்காமல் அவர்கள் கடமை ஆற்ற வேண்டியிருக்கிறது.

மக்களும், அரசியல் வாதிகளும் போலீஸ்காரர்களைத் திட்டுகிறார்கள். அவர்கள் இரு சாரார்க்கும் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் போலீஸ்காரர் என்றாலே கெட்டவர் என்ற கருத்து நிலவுகிறது. நாம் அப்படி எண்ணக் கூடாது. அவர்கள் செய்யும் நல்ல காரியத்துக்காக நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் போலீஸ்காரர்களின் பிரச்சினையைக் கேட்டு வருகிறேன். அவர்கள் நன்கு கடமை ஆற்ற வேண்டும். திட்டு வாங்கவும் வேண்டும். போலீஸ்காரர்களை நாம் வேற்று மனிதர்களாகக் கருத கூடாது. அவர்கள் நம்மை சார்ந்தவர்களே. எவ்வளவோ கஷ்டத்துடன் நம்மை பாதுகாக்கிறார்கள்.அவர்களைக் குறை கூறுவதை விட்டு அவர்களுக்கு நன்றியுடைய வர்களாக இருக்க வேண்டும்.

கே: அன்னையின் பாதங்களுக்கும் குருவின் பாதங்களுக்கும் உள்ள தூரம் என்ன?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: அன்னையிடம் தன்னலம் சிறிது இருக்கக் கூடும். குருவிடம் அது கிடையாது.

கே: நம் நாட்டில் பனிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் இருக்கின்றன. அவைகளின் சிறப்பு என்ன என்று விளக்கிச் சொல்லுங்கள்.

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நம் நாட்டின் ஒருமைப் பாட்டுக்காக, நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஜோதிர்லிங்கங்கள் நிறுவப்பட்டன. அதைப் பார்ப்பதற்காக மக்கள் பிரயாணம் செய்யும் போது நம் நாடு ஒன்று தான் என்று தெரிந்து கொள்வார்கள்.

கே: தியானம் நம் விதியைப் பிரகாசமாக்கும் என்று சொல்கிறீர்கள். அது எப்படி முடியும்?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: தியானம் உங்கள் அதிர்வலைகளை ஒருங்குபடுத்தி நல்வழியில் செலுத்தும். எவ்வளவுக் கெவ்வளவு நல்ல வழியில் செல்வோமோ அவ்வளவுக் கவ்வளவு அதிர்ஷ்டமும் நம் வாழ்க்கையில் வந்து சேரும். இது இயற்கை.

கே: வாழ்க்கையில் ஏன் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: கொஞ்ச நேரம் பொறு. குழப்பம் தானாகவே விலகும். மனம் குழம்பியிருந்தால், நம் முடிவுகள் தவறாக இருக்கும். வேறு ஏதாவது செய்திருக்கலாமோ என்று நினைப்போம்.

கே: அகம்பாவத்தை ஒழிப்பது எப்படி?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: இயல்பாக இரு. எல்லோருடனும் நட்பாயிரு. இயல்பாக இருக்கும் போது அகம்பாவம் தானாக மறைந்து விடும்.

அகம்பாவம் மற்றவர்களுக்கும் நமக்கும் இடையே நாமே கட்டிக் கொண்ட சுவர். எப்போதுமே நான் சொல்வது தான் சரி என்று நினைப்பது தான் அகம்பாவம். அகம்பாவம் நம்மையும், மற்றவர் களையும் துன்புறுத்தும். நாம் இயல்பாக இருந்து எல்லோரும் நம்மை சேர்ந்தவர்கள் என்று உணர்ந்து திறந்த மனத்தோடு செயல் புரிந்தால், நம் மனத்தில் எந்த வித மன அழுத்தமும் இருக்காது. மனம் இலேசாகி விடும். அதனால் தான் ஒரு குழந்தையை போல் இயல்பாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது நாம் புரியும் செயல்களில் ஒரு ஒழுங்கு இருப்பதைக் காணலாம். ‘காரிய சித்தி” என்று சொல்வார்கள். நாம் நினைப்பது, விரும்புவது தானாகவே நிறைவேறும்.

கே: நான் பயோ டெக்னாலஜியில் எம்.டெக் பட்டம் வாங்கியிருக்கிறேன். நான் இயற்கை உரம் சம்பந்தமான விவசாயம் பற்றி தொழில் செய்ய விரும்புகிறேன். இயற்கை உரத்துடனான விவசாயத்தை எப்படி முழு நேர வேலையாக கொள்வது?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: இயற்கை உரம் சம்பந்தமான தொழிலுக்கு மிகவும் தேவை நிலவுகிறது. இயற்கை உரம் போட்டு விளைந்த பொருள்கள் சரியாக விநியோகம் செய்ய உதவலாம். அதனால் தான் நாம் “ஶ்ரீ ஶ்ரீ விவசாய விஞ்ஞான கல்லூரி” தொடங்கியிருக்கிறோம். அவர்களுடன் பேசுங்கள்

நாம் கட்டாயாமாக இதை செய்ய முடியும்.