தியானமே ஆத்மாவிற்கான உணவு....


20
2012
April

தியானத்தின் இரகசியம் – நாள் 1

20, ஏப்ரல்  2012 – கலிபோர்னியா
அடுத்த மூன்று நாட்கள் நாம் தியானத்தைப் பற்றித் தேடித் தெரிந்து கொள்வோம்.
இந்தப் பயணத்திற்கு நீங்கள் தயாரா? சீட் பெல்ட்டை இருக்கிக்கொள்ளுங்கள்!
தியானத்திற்கு தேவையான சீட் பெல்ட் என்ன தெரியுமா? வீட்டிலிருப்பது போன்ற ஒரு உணர்வு, இயல்பாக இருப்பது! அலுவலகத்தில் இருப்பது போன்ற ஒரு முறையான உணர்வில் இருந்தால், உங்களால் தியானம் செய்ய முடியாது. தியானத்திற்கு தேவை  தளர்ந்து ஓய்வாய் வீட்டிலிருப்பது போன்ற உணர்வு.
நீங்கள் எல்லோரும் அப்படி இருக்கிறீர்களா? ஆம், இது கலிபோர்னியா, இங்கு எல்லோரும் அப்படி இலகுவாய் முறைமையின்றித்தான் இருப்பீர்கள். அதுதான் கலிபோர்னியாவின் சிறப்பு, எளிதாய், வீட்டிலிருப்பது போன்று இருக்கலாம்.
எனவே நாம் தியானத்தின் தேவை பற்றி ஆராய்வோம். நாம் ஏன் தியானம் செய்ய வேண்டும், அதற்கான வழிகள் என்னை? அதன் பயன்களுக்கு போகவில்லை; அதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று யூகிக்கிறேன். ஆனால் அதன் தேவை, வழிமுறைகள், எப்படி வெற்றிகரமாய் தியானம் செய்வது, பலவிதமான தியானங்கள், இவற்றைப்பற்றி எல்லாம் நாம் ஆராய்வோம்.
இப்போது, தியானத்தின் தேவை, நாம் ஏன் தியானம் செய்ய வேண்டும்?
இந்தத் தேவை எதிலிருந்து வருகிறதென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் தன் இயல்பான வாழ்வில் தேவையானது, குறையாத ஆனந்தம், திரியாத அன்பு அல்லது எதிர்மறை உணர்வாக மாறாத அன்பு, குறையாத மகிழ்ச்சி. இது இயல்பல்லவா?
தியானம் நமக்கு அந்நியமானதா? முழுக்க முழுக்க இல்லை! ஏனென்றால் நீங்கள் பிறப்பதற்கு முன்பு சில மாதங்கள் தியானத்தில் ஆழ்ந்திருந்தீர்கள். உங்கள் தாயின் கருவில் ஏதும் செய்யாமல் இருந்தீர்கள். உங்கள் உணவைக்கூட நீங்கள் மென்று சாப்பிடவில்லை, நேராக உங்கள் வயிற்றில் சேர்க்கப்பட்டது; நீங்கள் வயிற்றில் ஆனந்தமாக மிதந்துகொண்டும் திரும்பிக் கொண்டும் உதைத்த வாறும் இருந்தீர்கள்’ சில சமயம் இங்கே சில சமயம் அங்கே; ஆனால் பெரும்பாலான நேரம் ஆனந்தமாக மிதந்துகொண்டுதான் இருந்தீர்கள். அதுதான் தியானம்.
நீங்கள் எதுவுமே செய்ய வில்லை, உங்களுக்காக எல்லாமே செய்யப்பட்டது. எனவே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஒவ்வொரு ஆத்மாவிற்குள்ளும் அந்த முழு வசதியான நிலைக்கு ஏங்கும் அந்த இயற்கையான உந்துதல் இருக்கிறது. உங்களுக்கு ஏன் அந்த வசதி தேவைப்படுகிறது? ஏனென்றால் நீங்கள் ஒரு காலத்தில் அவ்வாறு வசதியாக இருந்தீர்கள். ஏற்கனவே இருந்த அந்த வசதியான நிலைக்கு ஏங்குவது ஒரு இயல்பான விஷயம், அதுவே தியானம். தியானம் ஒரு முழு வசதியான நிலை. நீங்கள் ஏற்கனவே சுவைத்திருக்கும், இந்த பரபரப்பான இறைச்சலான உலகத்திற்கு வரும் முன் இருந்த நிலையை அடைய விரும்புவது இயற்கையே. ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே சுழற்சிதான், எல்லாமே தான் முன்பிருந்த ஆதி நிலையை அடையவிரும்புகிறது, அதுவே உலகின் இயல்பு. நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பிளாஸ்டிக்கை தவிர எல்லாமே பின்னோக்கிச் செல்கிறது; எல்லாமே சுழற்சிதான்.
பாருங்கள், இலையுதிர்காலம் வரும்போது, இலைகள் திரும்ப மண்ணுக்கு செல்கிறது. இயற்கை அவற்றை மறு சுழற்சி செய்ய தானே ஒரு வழி வைத்திருக்கிறது. நாம் தினசரி வாழ்க்கையில் பதிந்து வைத்துள்ள எல்லாவற்றையும் மறுசுழற்சி செய்ய வேண்டிய ஒரு இயற்கையான உந்துதல், அந்த பதிவுகளை களைந்து விட்டு இந்த உலகில் நாம் உதித்த அந்த நிலைக்கு செல்வது என்பவையே தியானம். திரும்பவும் புத்துணர்ச்சி பெறுவது, மறுபடி உயிர்ப்பெடுப்பது அதுவே தியானம். நம் ஆதி இயல்பான ஆழ்ந்த அமைதிக்கு திரும்புவதே தியானம். முழுமையான மகிழ்ச்சியும் ஆனந்தமுமே தியானம். கிளர்ச்சியற்ற இன்பமே தியானம். ஏக்கமும் தவிப்பும் அற்ற பரபரப்பூட்டும் நிகழ்வே தியானம். வெறுப்போ அல்லது வேறுவித எதிர்மறை உணர்வோ இல்லாத
அன்புதான் தியானம். நம் ஆன்மாவிர்கான உணவு தியானம், எனவே ஒரு இயற்கையான தாபம் உணவின் மீது ஏற்படுகிறது. நீங்கள் பசியோடிருக்கும்போது தானாக ஏதோ உணவு உண்கிறீர்கள். தாகமாய் இருக்கும் போது தண்ணீர் தேவைப்படுகிறது. இதைப்போலவே, நம் ஆத்மா தியானத்திற்காக ஏங்குகிறது. இது எல்லோருக்கும் உண்டு. இதனால் தான் நான் சொல்கிறேன், இந்த உலகில் ஆன்மீகத்தை தேடாதவர் யாரும் இல்லை. அவர்களுக்கு தெரியவில்லை அவ்வளவுதான். அதை அவர்கள் உணர்வதில்லை. உணவு எங்கு இல்லையோ அங்கு தேடுகிறோம், அதுதான் பிரச்சினை.
உங்கள் காருக்கு பெட்ரோல் போட மளிகைக் கடைக்கு செல்வதைப் போன்றது இது. அதனால் பயனில்லை. மளிகைக் கடையை சுற்றி சுற்றி வந்து, “என் காருக்கு பெட்ரோல் வேண்டும்” என்கிறீர்கள். அது உதவாது, ஏனென்றால் நீங்கள் பெட்ரோல் பங்குக்கு அல்லவா செல்ல வேண்டும்.
எனவே நாம் சரியான திசையை கண்டுகொள்ள வேண்டும். அதைத்தான் நாம் இப்போது தேடப் போகிறோம். என்னென்ன வழிகள் இருக்கிறது, எப்படி தியானம் செய்வது, நமக்குள்ளே அந்த முழுமையான வசதியை அனுபவிப்பது எப்படி.
எனவே ஐந்து வழிகள் இருக்கிறது:
முதல் வழி உடம்பு மூலமாக; யோகாசனப் பயிற்சி மற்றும் உடற் பயிற்சி மூலமாக. உங்கள் உடம்பு சில குறிப்பிட்ட இருக்கை நிலைகளை லயமாக செய்கையில் உங்களுக்கு ஒரு வித சோர்வு ஏற்பட்டு அப்போது மனம் தியானத்திற்கு நழுவுகிறது.
இது மிக சுவாரசியமாக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாய் இருக்கும்போதும் தியானம் செய்ய முடியாது, அதே நேரம் நீண்ட ஓய்வுக்கு பின்னும் தியானம் செய்ய முடியாது. ஆனால் உங்கள் உடம்பு சரியான அளவு சோர்வோடு, அதே நேரம் அந்த அளவு சோர்வும் இல்லாது, ஒரு நுட்பமான சமநிலையில், உங்கள் மனம் தியானத்திற்கு நழுவுகிறது, அல்லது நீங்கள் முழுதுமாக தியானத்திற்கு நழுவுகிறீர்கள். எனவே முதல் வழி உங்கள் உடம்பு மூலமாக.
இரண்டாவது பிராணன் மூலம் அல்லது நம் சுவாசம் மூலம். சுவாசித்தல் மூலம் தியானத்தை அடையமுடியும். இது நமக்குத் தெரியும், ஒரு மிகச்சிறந்த உதாரணம் சுதர்சனக்கிரியா. பிராணாயாமத்திற்கு பின்னர் சுதர்சனக் கிரியா செய்துவிட்டு அமரும் போது எளிதாய் தியானம் கைவரும்.
எனவே சுவாச நுட்பத்தின் மூலம் தியானம் செய்ய முடியும்.
மூன்றாவது, நம் ஐம்புலன்களான, பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் தொடு உணர்ச்சி மூலம் இன்பம் நுகரும்போது தியானத்தில் ஆழலாம். ஐம்புலன்களும் பஞ்ச பூதங்களோடு தொடர்பு உடையவை. நம் உலகம் பஞ்ச பூதங்களினால் செய்யப்பட்டது. அதே பஞ்ச பூதங்களின் வேறு ஒரு வித கலவையால் இந்த பிரபஞ்சம் செய்யப்பட்டிருக்கிறது. நெருப்பு கண்களுடனும், நுகர்தல் மண்ணுடனும், சுவை நீருடனும், ஓசை வெளி மண்டலத்துடனும், தொடு உணர்வு காற்றுடனும் தொடர்புடையன.
நீங்கள் தண்ணீரிலோ அல்லது நீச்சல் குளத்திலோ இருக்கும்போது தொடு உணர்வு அதிகம் தெரிவதில்லை? இதை கவனித்திருக்கிறீர்களா? அதிக அளவு இல்லை, ஆனால் நிச்சயம் சிறிதளவாவது வித்தியாசம் இருக்கும், ஏனென்றால் பஞ்ச பூதங்களும் ஒவ்வொரு பூதத்திலும் கலந்து உள்ளது. தண்ணீரில் காற்று இருக்கிறது; ஆனால் சிறிதளவு மட்டுமே. பிரபஞ்சத்தில் உள்ள இந்த பஞ்ச பூதங்களும் ஐந்து புலன்களோடு தொடர்பிலிருக்கிறது. இவற்றில் ஏதோ ஒரு புலனின் மூலமாக தியானத்தில் ஆழ முடியும்.
நான்காவது உணர்ச்சிகளின் மூலம். உணர்ச்சிகளின் மூலம் கூட தியானத்தில் ஆழ முடியும்.
ஐந்தாவது அறிவுபூர்வமாக. சற்றே அமர்ந்து இந்த உடம்பு கோடானு கோடி கணக்கான செல்களினால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஆஹா! ஏதோ நடக்கிறது, ஏதோ தூண்டப்படுகிறது.
வான வெளி அருங்காட்சி சாலைக்கு செல்லும்போது, உங்களில் எதுவோ தூண்டப் படுகிறது. வான வெளி அருங்காட்சி சாலையில் நுழையும் முன்னும் வெளிவந்த பின்னும்  நீங்கள் வித்தியாசமாக உணரவில்லை? உங்களில் எத்தனை பேர் அதை உணர்ந்திருக்கிறீர்கள்?
வான வெளி அருங்காட்சியகம் செல்லும்போதோ அல்லது வான்வெளி பற்றிய திரைப்படம் பார்கும்போதோ உங்களுக்குள் மிக ஆழத்தில் ஏதோ நடக்கிறது; எதுவோ தூண்டப்படுகிறது. அந்த அனுபவத்திலிருந்து வெளிவந்த பின் உங்களால் யார் மீதும் எரிந்து விழ முடியாது. அது உங்களால் முடியவே முடியாது, ஏனென்றால் பிரபஞ்சத்தின் விசாலம் தெரியவர வாழ்கையின் அர்த்தமே மாறிவிடுகிறது.
அதுதான் வாழ்கையின் பொருள். எது நம் உயிர்? இந்த பூமி என்பது என்ன? இந்த வெளி மண்டலங்கள் எங்கிருக்கின்றன? உங்களுக்குள் ஏதோ மாற்றம் நடக்கிறது. இப்படி அறிவின் மூலம் தியானத்தில் நுழைய முடியும் என்பதற்கான ஒரு மிகச்சிறிய பார்வையைத்தான் நான் சொல்கிறேன்.
எனவே, அறிவின் மூலமாக, உணர்ச்சியின் மூலமாக, ஐம்புலன்களின் மூலமாக, சுவாசத்தின் மூலமாக அல்லது சுதர்சனக்கிரியா மூலமாக மற்றும் உடல் இருக்கை பயிற்சியின் மூலமாக தியானத்தை அடைய முடியும்.
நான் சொல்வதை நினைவு கொள்ளுங்கள், தியானம் என்பது ஒரு முழுவசதியான நிலை. யாருக்கு வசதி தேவை இல்லை? எல்லோருக்கும் வேண்டும். நமக்கு எப்படி முழு வசதி நிலையில் இருப்பது என்று தெரிவதில்லை அவ்வளவுதான். தியானம் என்பது அசைவிலிருந்து அசைவற்ற நிலைக்கு செல்வது, சத்தத்திலிருந்து அமைதிக்கு செல்வது. இந்த ஒரு விஷயத்தை நாம் இன்று புரிந்து கொண்டு தியானம் செய்வோம்.
தியானம் செய்ய நாம் கடுமையான மன நிலையில் இருக்க வேண்டியதில்லை. தியானம் என்பது இயல்பானது, நம் வீட்டிலிருக்கும் நிலைபோல. நீங்கள் உங்களோடு வீட்டிலிருப்புது போல் இயல்பாக, பிரபஞ்சதிலிருக்கும் எல்லாவற்றோடும் வீட்டிலிருப்பது போன்ற இயல்பாக இருப்பதே தியானம். சரியா!
<குருஜி எல்லோரையும் தியானம் பயிற்றுவிக்கிறார்>
கேள்வி: கடவுளை பற்றி உங்கள் பார்வை என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எல்லாவித பார்வையிலும் கடவுள் இருக்கிறார்.
நாம் கடவுள் எங்கோ சொர்க்கத்தில் அமர்ந்திருப்பதாக நினைக்கிறோம், இல்லை! அன்பே கடவுள் மற்றும் அன்பினால்தான் இந்த பிரபஞ்சம் ஆக்கப்பட்டிருக்கிறது. இது எடை போடாதது, எல்லோருக்கும் எப்போதும் கிடைப்பது, எந்த நேரத்திலும். இந்த சக்தியை நீங்கள் கடவுள் என்று அழைக்கலாம். எல்லாவித விரிவாக்கத்திற்கும் விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டது.
கேள்வி: தியானம் செய்யும் போது எனக்குள் கேட்கும் குரலை எப்படி அமைதிப் படுத்துவது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இதை பலவிதங்களில் அணுகலாம்.
முதலில் நீங்கள் அதை ஒத்துக்கொள்ள வேண்டும், எதிர்க்கக் கூடாது. நீங்கள் அதை எதிர்த்து அது இருக்கக் கூடாது என்று உணரும்போது, எவ்வளவுக்கு எவ்வளவு அது வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய் அது ஒட்டிக்கொள்ளும்.  நம் மனது அல்லது நம் உணர்வின் இயல்பு என்னவென்றால் ஒரு விஷயத்தை எதிர்ப்பதால் அது தவிர்க்கப்படுவதில்லை, மாறாக வளர்கிறது. எனவே முதலில் அதை அப்படியே விட வேண்டும், தடுக்கக் கூடாது.
இரண்டாவது, நான் சொன்னது போல ஐந்து விதங்களில் தியானம் செய்யலாம். சுவாசம் உங்கள் சத்தத்தை குறைக்கும். சரியான உணவு முறை கூட உங்கள் தியானத்தை மேம்படுத்தும். உடற்பயிற்சி, இருக்கை பயிற்சி (ஆசனம்), சரியான உணர்ச்சிகள், நல்ல புரிதல், என இவை எல்லாம் தியானத்திற்கு உதவும்.
கேள்வி: குருஜி, எனக்கு ஒரு அழகிய தியான அனுபவம் கிடைத்தது, ஆனால் அதில் என் உடம்பில் எந்த வித உணர்வும் இல்லை. ‘நான்’ மட்டுமே இருந்தேன், பின்னர் ஒரு உதறலில் நான் திரும்பிவிட்டேன். என்ன நடந்தது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இது நல்லது, உங்கள் ஆழ் மனதை, உணர்வை ஒரு சிறு பார்வை பார்த்துவிட்டு வந்திருக்கிறீர்கள். இது இயற்கை, இது நல்லது. ஆனால் திரும்ப முயற்சித்தால் நாளை மறுபடி வராது. ‘நேற்று நான் கண்ட அதே அனுபவம் திரும்ப வேண்டும்’ என்றால் கிடைக்காது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய புதையல் உங்களுக்கு கிடைக்கும். எனவே, அதை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவே! உங்களை அதிலேயே பூட்டிகொள்ளாதீர்கள். நீங்கள் இந்த அனுபவங்களை விட மிகப் பெரியவர்.
கேள்வி: தியானத்தின் போது, என் மனம் அமைதியாகிவிட்டது ஆனால் மனதை தாண்டி மேலே போக முடியவில்லை. நான் கடுமையாய் முயற்சிக்கிறேனா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம், நீங்கள் மனதைத் தாண்டி செல்ல முயற்சிக்கக் கூடாது. உங்கள் நலனுக்காக, அதை அப்படியே விட்டுவிடுங்கள், சரியா?
நீங்கள் மசாஜ் செய்துகொள்ளும்போது மேசை மீது படுத்துக்கொண்டு எப்படி இருக்கிறீர்கள்? மசாஜ் செய்பவரிடம் விட்டுவிட்டு அப்படியே இருக்கிறீர்கள். மசாஜ் செய்பவர் அவர் வேலையை அவர் செய்கிறார், நீங்கள் எதுவும் செய்வதில்லை. அப்படியே தான் தியானத்திலும். இயற்கை உங்களை பார்த்துக்கொள்ளட்டும், பேராத்மா உங்களை கவனித்துக்கொள்ளும்.
கேள்வி: சிறிது காலம் தியானம் பயின்றபின் என்னுடைய எதிர்வினைகளான எதிர்வாதம் மற்றும் கோபம் போன்றவற்றில் என் பாங்கு புரிந்து விட்டது. என் எதிர்வினைகளை நான் எப்படி மாற்றுவது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:நீங்கள் உங்களுடைய பாங்கு என்று கருதுவதை எல்லாம் உங்களுடையது அல்ல என்று அப்படியே விட்டு விடுங்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இது என்னுடைய பாங்கு என்று நீங்கள் அடையாளம் காண்கையில், நான் எப்போதும் கோபமாயிருக்கிறேன், எப்போதும் மறுத்துப் பேசுகிறேன் என்று பார்க்கும்போது நீங்கள் பழையனவற்றை, அந்த உங்கள் பாங்கை கெட்டியாக பிடித்துக்கொள்கிறீர்கள். எனவே அது உங்களுடயது இல்லை என்று விட்டுவிடுங்கள். நேற்று இருந்தது, என்னிடம் வந்தது, அதனால் என்ன?
சில நேரங்களில் வானத்தில் கருத்த மேகம் பார்க்கிறீர்கள். அவற்றை வானம் சொந்தம் கொண்டாடுகிறதா என்ன? வானம் மேகத்தை வர விடுகிறது போகவும் விடுகிறது. அதைப்போல உணர்ச்சிகள் வருகின்றன, சில நேரம் மகிழ்ச்சி சில நேரம் சோகம். அவற்றை நீங்கள் துறந்துவிட வேண்டும். இதுவே முதல் படி. அவை வந்து போகட்டும்.
கேள்வி:பல வருடங்கள் தியானம் பயின்றபின், ஒருவருடைய முழு வாழ்வே தியானமாகிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப்பற்றி விளக்க முடியுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:ஆம்! அந்த உள் அமைதி நீங்கள் என்ன செய்தாலும் தொடர்ந்து இருக்கும். நீங்கள் நடக்கலாம், பேசலாம், உண்ணலாம், அரட்டை அடிக்கலாம், செய்திகள் பார்க்கலாம், அதில் எல்லாம் அந்த உள் அமைதி தொடர்ந்து வரும். அதற்கு நீங்கள் பழகிப்போய் விடுவீர்கள். அது உங்களை விட்டு விடாது.
ஆனால், “எனக்கு அந்த அனுபவம் எப்போது கிடைக்கும்” என்று சொல்லிகொண்டிருக்காதீர்கள். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதைப்பற்றி கவலை இல்லை! என்ற மனப்பாங்குடன் நடந்துகொள்ள வேண்டும். அதுவே சிறந்தது. ‘பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும்’.
மத்திய காலத்தில் வாழ்ந்த கபீர் என்ற ஞானியின் ஒரு வாசகம் உண்டு. அவர் கூறினார் நான் கடவுளை எப்போதும் இங்கும் அங்கும் தேடினேன், எங்கே கடவுள்?, எங்கே கடவுள்?
அவர் கூறினார். ‘நான் கடவுளை தேடும்போதேல்லாம் அவர் கிடைக்கவில்லை. ஆனால் நான் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓய்வானபோது கடவுள் என் பின்னால் வருகிறார். கடவுள், என் பின்னாலேயே வந்து ‘கபீர்!, கபீர்!, கபீர்! என்று சொல்லிகொண்டிருக்கிறார்”. அவர் கடவுளை தொடர்ந்து தேடி ஓடாமல் இருந்த போது கடவுள் அவர் பின்னால் ஓடி வந்தார். இது மிகவும் உண்மை!
உங்களுக்கு நன்கு தளர்வாய் இருக்க தெரிந்தாலே போதும். எந்த விழைவும் இன்றி! ஏனென்றால் நீங்கள் விழைந்து தேடிப்பெரும் எல்லாமே பொருட்கள், அதனால் அளவானது. ஆன்மீக உலகில் உங்கள் முயற்சியை விட அதிகமாய் எதிர்பார்க்கும் எதுவும் அங்கு கிடையாது. உங்கள் முயற்சி எல்லாம், எல்லாவற்றையும் விடுவதற்கும், முயற்சி இல்லாமல் இருப்பதற்கும் தான். அப்படி செய்யும்போது எல்லாமே கிடைக்கப்பெறுவீர்கள்.
இந்த படைப்பில், பத்தில் ஒரு பாகம் தான் பொருள் உலகம், மீதி ஓன்பது பாகம் ஆன்மீக விஷயங்களே.
முயற்சியினால் அன்பை வளர்க்க முடியாது, முயற்சியினால் தயை வராது, முடியுமா என்ன? நான் தயையோடிருக்க முயற்சிக்கிறேன் என்று சொல்ல முடியுமா என்ன? உங்கள் கடும் முயற்சியே தடையாய் இருக்கும். முயற்சியின்றி தளர்வாய் இருங்கள் தயை தானாய் பெருகும். மகிழ்ச்சியாய் இருக்க நீங்கள் விழைவதே மகிழ்ச்சியை தடுக்கும் காரணி. எனவே ‘முயற்சி’ என்பது பொருள் உலகின் மொழி. முயற்சியில்லை என்றால் பணம் சம்பாதிக்க முடியாது, படிக்க முடியாது, மதிப்பெண் வாங்க முடியாது. முயற்சி இல்லை யென்றால் உங்களால் பட்டம் பெற முடியாது. எல்லாப் பொருளுக்கும் நிச்சயமாய் முயற்சி வேண்டும். வீடு கட்ட முயற்சி வேண்டும். சும்மா உட்கார்ந்து யோசித்தால் எதுவும் நடக்காது. ஆனால் ஆன்மீக உலகில் ஏதேனும் பெற விரும்பினால் நேர் மாறாக எந்த முயற்சியும் தேவையில்லை. சில நேரம் உட்கார்ந்து முயற்சியற்று இருந்தாலே போதும்.
எதுவும் செய்யாமல் இருப்பது என்பது மிகக் கடினம் என்று நீங்கள் கூறுவீர்கள் என்று தெரியும். அமைதியாய் இருப்பது கடினம் தான். ஆனால் உண்மையில் அது கடினம் போல் தோன்றுகிறது அவ்வளவே. இரண்டு நாட்கள் இங்கு இருந்தால் அது எவ்வளவு எளிது எவ்வளவு இலகு என்று தெரிந்துவிடும்.
கேள்வி: உணர்வை விட்டுவிட்டு, ஆன்மீக உலகிற்கு, மனதின் புரிதலுக்கு ஒருவர் எப்படி செல்வது? இந்த இயல் உலகை வெகு வேகமாய் கடக்க சிறந்த வழி என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இதுதான் நான் சொன்ன ஐந்தாவது வழி. அறிவு.
நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு போகவேண்டாம், இங்கேயே இருந்து, இந்த சத்தத்திலேயே, அழகை உணர்ந்து, அவ்வளவு அழகான ஒன்றை, அவ்வளவு அற்புதத்தை, அவ்வளவு வசீகரமானதை, இங்கேயே, இப்போதே! இங்கேயே இப்போதே என்பதை நாளை பார்ப்போம்!